வெந்ததை மட்டுமா தின்றோம்!
வெந்ததை மட்டுமா தின்றோம்
நண்பர்களுடன் மலையேறும் போது அவர்கள் என்னை விட சீக்கிரமே சோர்வானதை கவனிக்க முடிந்தது. இத்தனைக்கும் அவர்கள் என்னில் ஏழு வயது இளையர்கள். காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்ததன் விளைவே இந்த பதிவு.
வீட்டை சுற்றி குறைந்தது நாலு பப்பாளி மரங்களாவது நிற்கும். எதையாவது சாப்பிட வேண்டும்போல் இருந்தால் எந்த மரத்தில் பழம் பழுத்திருக்கிறது என்று பார்க்க வேண்டியது. களைக்கொம்பு எடுக்க வேண்டியது. மெதுவாக தோல் சீவி வீட்டில் எல்லோருக்கும் கொடுத்து சாப்பிட்டு நிமிர்ந்தால்…
பக்கத்து தோப்பு பலாமரத்தில் இருந்து பலாப்பழம் வாசம் வீசும். காக்கை குருவிகள் கொத்திச் சாப்பிட்டு கொட்டைகள் கீழே விழுந்து கிடக்கும். தோப்பின் உரிமையாளருக்கு தகவல் சொல்லி விட்டாலும் ‘எப்படா விழும்’ என்று பார்த்திருந்து கீழே விழுந்ததும் அந்த இடத்திலேயே பிய்த்துச் சாப்பிட்டு விட்டு தான் மறு வேலை. அதுவும் கூழன்சக்கை என்றால் யாரும் விலைக்கு வாங்க மாட்டார்கள். கைகளாலேயே பிய்த்து சாப்பிடுவதற்கும் வசதியாக இருக்கும். பலாக்கொட்டைகளையும் விட்டு வைப்பதில்லை. அவித்தும்/வறுத்தும் சாப்பிடலாம். மீன்கறி மற்றும் அவியல் கூட்டுகளில் சேர்த்தும் சாப்பிடலாம். வறுக்கும் போது சிறிது மணல் போட்டு வறுக்க வேண்டும். ‘டப் டப்’ என அது வெடிக்கும் ஓசையே ஒரு சங்கீதம். அவித்த பலாக்கொட்டைகளை கருப்பட்டியுடன் சேர்த்து உரலில் இடித்து உருண்டை பிடித்து சாப்பிட வேண்டுமே..!ஆஹா..என்னே ஒரு சத்தான உணவு.
ஊருக்குள் எப்படியும் பதினைந்து பனைமரங்களாவது இருக்கும். பனை நுங்கு சீசன் வரும்போது தெற்குச்சூரங்குடி சாயபு நுங்கு இறக்க வருவார். அவரிடம் ஒரு மணி நேரமாக கெஞ்ச வேண்டும். ‘தங்கத்துக்க மொவனாடே…கொப்பன் நல்லாயிருக்கானா ?’ என குசலம் விசாரிப்பார். அவருக்கு எல்லா குலைகளையும் ஓரிடத்தில் சேர்த்து அவர் சைக்கிளில் பாரம் ஏற்ற உதவினால் ஒரு குலை நுங்கு தருவார்.
எங்கள் வீட்டில் ஒரு சீமை நெல்லிக்கனி மரம் இருந்தது. அதிலே மாடு கட்டுவதால் மரம் அசைந்து கொண்டேயிருப்பதால் அவ்வளவாய் காய்க்காது. கவாஸ்கர் வீட்டு சீமை நெல்லி மரம் நன்கு காய்க்கும். அந்த நெல்லிக்கனிகளைப் பறித்து அங்கேயே அடுப்பு மூட்டி, அவித்து, மிளகாய்ப்பொடி, உப்பு போட்டு ஆளுக்கொரு பலா இலையில் பரிமாறி சாப்பிட்டு வீடு வந்தால்..
களியங்காட்டு மாமி மலையங்கரையில் பயிரிட்டு அறுவடை செய்த வேர்க்கடலையோடு காத்திருப்பார். பாதியை அவித்தும், மறுபாதியை மற்றொரு நாள் வறுப்பதற்காகவும் வைத்திருப்பார் அம்மா. அவித்த/வறுத்த கடலையை பத்து பங்காக பிரிப்பாள் அக்கா. கண்கள் எண்ணிக்கையிலேயே இருக்கும். ஒன்று குறைந்தாலும் போர் மூள வாய்ப்பிருப்பதால் அக்கா கவனமாக பங்கு வைப்பாள்.
சாப்பிட்டு தூங்கினால் மறு நாள் காலையில் அழகேசன் அண்ணன் வீட்டு கொல்லையில் அந்த மூத்தம்மை பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் முந்திரி பழங்களை கொட்டி பழம் தனியே, கொட்டை தனியாக திருகிக்கொண்டிருப்பார். அந்த பழங்களை எடுத்து வந்து வெட்டி, உப்புக்கண்டம் போட்டு சாப்பிட்டு வாயை கழுவி பாண்டியாட போனால்..
ஆட்டம் மும்முரமாய் போய்க்கொண்டிருக்கும் போது தொப்பென்று பனம்பழம் விழும். சில நேரங்களில் சுட்டு சாப்பிடுவோம். சில நேரங்களில் அவித்து சாப்பிடுவோம். அதன் வெள்ளை நிற சக்கை தான் எங்களுக்கு அப்போதைய மீசை, தாடி. உவரி வைகாசி விசாகத் திருவிழாவின் போது மலிவாக பனங்கிழங்குகள் விற்பனைக்கு வரும். வழியெங்கும் பதனீரும் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். கூடவே நுங்கு சர்பத். அதையெல்லாம் வாங்கிச்சாப்பிட காசு வேண்டுமே. புன்னைக்காய், வேப்பமுத்து, புளியமுத்து சேர்த்து விற்ற காசு, பழைய நோட்டு புத்தகங்கள், பிளாஸ்டிக்குகள், தகரம் விற்ற காசு, நாட்டுக்கோழி முட்டை, முருங்கைக்காய், மாங்காய், தேங்காய், ரோசாப்பூ, பிச்சிப்பூ விற்ற காசு, பள்ளி கோடைவிடுமுறையின் போது தீக்குச்சி கம்பெனியில் வேலை பார்த்த காசு, அப்பாவின் வெள்ளி முடிகளை பிடுங்கி முடிக்கு ஒரு ரூபாய் என பல வகைகளில் சேமித்த உண்டியல் உடைக்கப்படும்.
சித்திரை, வைகாசி மாதங்களில் ரக ரகமாய் மாம்பழங்களுக்கு பஞ்சம் இருக்காது. எல்லோர் வீட்டுத்தோட்டத்திலும் மாமரங்கள் உண்டு. அதிலும் திருட்டு மாம்பழங்களின் ருசியே தனி.
ராமண்ணன் வீட்டுத் தோப்பில் ஒரு சிவப்புக்கொய்யா மரம் உண்டு. அணில் கறம்பி விழுகின்ற அந்த பழங்களைப் பொறுக்க பெரும் போட்டியே இருக்கும். அதிகாலையில் முதலில் செல்வோருக்குத்தான் பழம்.
எங்கள் ஆரம்பப் பள்ளி வளாகத்தில் ஒரு புளிய மரம் உண்டு. புளியங்காய்களை பறித்து, கல்லில் தேய்த்து, உப்பு சேர்த்து, நினைக்கும் போதே நாக்கு சப்பு கொட்டுகிறது. புளியம்பழங்களில் இருந்து முத்தைக் குத்தி எடுத்தப்பின் பாண்டிவிளையாடுவதற்கு முத்துகளை தனியாக எடுத்து வைத்தபின் அவித்து மற்றும் வறுத்துச் சாப்பிட நாங்கள் தனியாக ஒரு பங்கு வைத்துக்கொள்வோம். மீத முத்துக்கள் தான் புளியமுத்து வியாபாரிக்குச் செல்லும். அவித்த முத்துக்களை உப்பு போட்டு இரவே தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவோம். வறுத்த முத்துக்கள் பள்ளிக்கூட நிக்கர் பாக்கட்டிலும், ஜியோமெட்ரிக் டப்பாக்களிலும் அடைக்கப்படும். ஏதாவது ஒரு பாடவேளை ஆசிரியர் வரவில்லையென்றால் பற்கள் புளியமுத்தை அரைத்துக்கொண்டிருக்கும். ‘இந்தா..உங்கிட்ட கடன் வாங்கின அஞ்சி புளியமுத்து’ என்றெல்லாம் கடன் வைத்து சாப்பிட்ட நாள்கள் அவை. புளியமுத்து சண்டைகளில் பிரிந்து போன பழைய நட்புகளும் உண்டு. புதிதாய் சேர்ந்த நட்புகளும் உண்டு.
பள்ளி செல்கின்ற வழியில் கிடங்கன்கரைவிளை சந்திப்பில் ஒரு நாவல் மரம் உண்டு. நாவல் பழ சீசனில் அந்த மரம் தான் எங்களின் கூடு.
தினமும் உமிக்கரியால் பல்துலக்கிக்கொண்டே முற்றத்தில் இருந்த மலை ஆரஞ்சு மரத்தில் பழம் எத்தனை பெரிதாயிருக்கிறது என்று பார்ப்போம். ஒன்றிரண்டு பழங்களை அவ்வப்போது சலிக்காம்ல் தந்து கொண்டிருந்தது அந்த மரம் எங்களுக்கு.
மாமம்மை வீட்டுக்கு போகும் போதெல்லாம் பாஞ்சி பழம் (சீத்தாப்பழம்) பறித்து வந்து விடுவோம். காயாக இருந்தால் தவிட்டுக்குள் வைத்து பழுக்க வைக்க வேண்டும். அண்ணன், அக்கா, தம்பி, தங்கைக்கு தெரியாத இடத்தில் ஒளித்து வைக்கும் கலை தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடித்தால் பழம் அம்பேல்.
மணியன்விளை ஆதீஸ் அண்ணன் வீட்டுக்கு டிவி பார்க்க போகிற வழியில் சில வாதாம் மரங்கள் உண்டு. மேலிருக்கும் பழத்தை சுவைத்த பின் கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து சாப்பிடுவது வரை கைகளும் வாயும் ஓயாது. அதே போல சுட்ட முந்திரிக்கொட்டையும் சின்னா பின்னமாகும் முந்திரிப்பருப்பு வெளியே வரும் வரை.
மாட்டுக்கு புல் அறுக்க போகும் போது காட்டு நெல்லிக்கனி நிறைய கிடைக்கும். அதைத் தின்ற பின் தண்ணீர் குடித்து அதன் தித்திப்பை அனுபவித்து கிடப்போம்.
ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி,மாதுளை முதலானவை விருந்தினர் யாராவது வாங்கி வந்தால் உண்டு. அக்கா திருமணத்திற்கு பிறகு அத்தானுடன் வீட்டிற்கு வரும் போது நிறைய வாங்கி வந்ததாக ஞாபகம். வீட்டுத்தோட்டத்தில் மாதுளைச்செடி ஒன்று உண்டு. அது நல்ல பழங்களை தந்ததே இல்லை. அன்னாசிச் செடியும் வீட்டில் உண்டு. எப்போதோ யாரோ வாங்கி வந்ததில் அம்மா பதியன் வைத்திருந்தார். தை மாத பொங்கலுக்கு வாங்கிய கரும்பின் மீதத்தை தோட்டத்தில் நட்டு வைப்பார். கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு என எல்லா வகையான கிழங்குகளையும் தோட்டத்தில் புதைத்து வைப்பார். பொங்கலுக்கு கட்டுகிற மஞ்சள் செடி வடசேரி சந்தையில் வாங்கியதாய் சரித்திரமே இல்லை. அதுவும் அதிகாலை தோட்டத்தில் இருந்தே பிடுங்கப்படும். பெரியவன் பங்கில் ஒரு செடி வைத்தால் அதே மாதிரி சின்னவன் பங்கு நிலத்திலும் வைப்பார் அம்மா. பின்னாளில் பிள்ளைகள் அடித்துக்கொள்ளக் கூடாதாம். எதையோ எழுத ஆரம்பித்து கடைசியில் அம்மாவின் பெருமையில் வந்து நிற்கிறது. அது தான் அம்மாக்களுக்கே உரிய சிறப்பு போலும்.
மேலவிளை வேலியில் நிற்கும் கள்ளிப்பழம், கப்பண்ணன் வீட்டு பிளம்ஸ், வேப்பம் பழத்தையும் விட்டு வைக்க வில்லை எங்கள் தினவெடுத்த நாவுகள்.
அப்பா கோயில்கொடைகளுக்கு ஆர்டர் அடித்து முடித்து வரும் போது கோயிலின் சார்பில் பிரசாதம் கொடுத்து விடுவார்கள். அதில் கண்டிப்பாக வாழைப்பழங்கள் இருக்கும். சாமியின் வசதியைப் பொறுத்து பழங்களின் ரகம் இருக்கும். பாளையங்கோட்டான் நிச்சயம் இருக்கும். இருநூறு வரி தாரர் கொண்ட சுடலையென்றால் ரசகதலி, செவ்வாழை, மட்டி ரகங்கள் இருக்கும். தவிர பாத்திரங்கள் கழுவி, துணி துவைத்து, குளித்து உபரி நீர் பாய்கிற இடத்தில் வாழையடி வாழையென தலைமுறை, தலைமுறையாக நான்கைந்து வாழைகள் கன்றுகளோடு நிற்கும். அதில் பேயன், சிங்கன், மோரிஸ், பூங்கதலி முதலான ரகங்கள் இருக்கும். ஆக வருடத்தில் முன்னூறு நாட்கள் ஏதாவது ஒரு வாழைப்பழம் இருந்து கொண்டே இருக்கும். நாங்கள் சாப்பிட்டு, ஆப்பத்திற்கு அரைத்து, அடுத்தவர்களுக்கு கொடுத்தும் காலியாகாத நைந்த பழங்கள் ஆடு, மாடுகளுக்கு போய்ச்சேரும். ஊரில் யாருக்காவது திருமணம் வந்தால் மணமக்கள் சகிதமாய் பால் பழம் சாப்பிட வருவார்கள். அன்று ஏத்தன் பழம் மெனுவில் இருக்கும். அவர்கள் வெட்கத்தில் ஒரு துண்டு தான் சாப்பிடுவார்கள். நிறைய வீடுகளில் இது போல சாப்பிட வேண்டும். வயிற்றில் இடம் வேண்டுமே. மீதி பழம் வாண்டுகளுக்கு தான்.
உண்டு களித்த பழங்களைப் பார்த்தாயிற்று. அடுத்து மீன் வகைகளுக்கு வருகிறேன். வாரத்தின் செவ்வாய், வெள்ளி தவிர மற்ற ஐந்து நாள்களுக்கும் மீன் வேண்டும் எங்கள் பகுதி மக்களுக்கு. சில வீடுகளில் செவ்வாய் கிழமை கூட பார்ப்பதில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் கருவாடு. மற்றபடி சென்னைவாழ் மக்களைப் போல அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி, புரட்டாசி மாதங்களில் மீன்களுக்கு விடுமுறை கிடையாது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் வீட்டில் யாராவது ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்தால் மீன்களுக்கு விலக்கு உண்டு. பெரிய காடு, பொழிக்கரை, புத்தன் துறை, கன்னியாகுமரி கடலில் அன்று காலை பிடித்த புத்தம் புதிய மீன்கள் விற்பனைக்கு வரும். வளமீன், வாளை, சாளை, நவரை, அயிலை, பாறை, பூச்சி, நெத்தலி, கணவாய், துப்பாளை, அந்தி நேரத்தில் வரும் கிளாத்தி என வகை வகையான மீன்களை சாப்பிட்டு வளர்ந்த யாக்கையிது. கிளாத்தி மீனையும், மரச்சீனிக்கிழங்கையும் அவித்து நெல்லுச்சோறோடு பிசைந்து சாப்பிட வேண்டுமே..அது ஒரு பாக்கியம்!
மீன்வாங்க அத்திக்கடைக்கு போயாக வேண்டும். சுற்றியுள்ள ஏழெட்டு ஊர் மக்களுக்கும் அதுதான் பொதுவான சந்தை. அந்திக்கடை மருவி அத்திக்கடை ஆயிற்று. எங்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். நடந்து தான் போய்வருவோம் குறுக்கு வழியாக. தென்னந்தோப்புகள் வழியாகக்செல்லும் ஒற்றையடிப்பாதை, அதன் பிறகு கொஞ்ச தூரம் குளக்கரை வழியாகக்செல்லும் தார் சாலை, மறுபடியும் தென்னைமரங்கள் நிறைந்த ஒற்றையடிப்பாதை, பிறகு கொஞ்ச தூரம் தார் சாலை வழியாக நடந்தால் மீன்கடை வந்து விடும். ஏன் இவ்வளவு விளக்குகிறேன் என்றால், ஞாயிற்றுக் கிழமைகளில் வளமீன் கருவாடு வாங்கி வரும் போது வாசம் மூக்கைத் துளைத்து நாக்கில் ஜலம் ஊறும். தார் சாலையில் கடைகள், வாகனங்கள், மனிதர்களின் நடமாட்டம் இருப்பதால் அதுவரை பொறுமையாக இருக்கும் கைகள் ஒற்றையடிப்பாதை வந்ததும் தானாக கருவாட்டின் சதைப்பகுதியைப் பிய்த்து வாய்க்குள் போட ஆரம்பிக்கும். வீடு வரும் போது தோல் தான் மிஞ்சும். அம்மாவும் எதுவும் சொல்ல மாட்டார். அம்மாவுக்குத் தெரியும், பிள்ளைகள் இந்த வயதில் சாப்பிட்டால் தான் உண்டு
இரவெல்லாம் பேய்க்காற்று, பேய் மழை பெய்தால் அம்மா காலையிலேயே எழுப்பி விடுவார். ‘எலே எழும்பி தோப்புகளுக்கு போய் வாங்கலே..தேங்கா விழுந்து கெடக்கும்’. தேங்காய் மட்டுமல்ல, தென்னை மரமே விழுந்து கிடக்கும். தென்னை மரமே விழுந்து கிடக்கும் போது முருங்கைமரங்கள் மட்டும் எம்மாத்திரம். எல்லா வீடுகளிலும் அன்று முருங்கைக்காய் குழம்பு, கூட்டு, முருங்கை இலை பொறியல் தான் சமையல் மெனு.
வேரோடு சாய்ந்த தென்னை மரத்திற்கு வருகிறேன். மரம் அறுக்கும் வேலையாட்களோடு உரிமையாளர் வருவதற்குள் முற்றிய தேங்காய்கள் எங்கள் வீடுகளுக்கும், இளம் தேங்காயின் இள நீர் மற்றும் வழுக்கையான தேங்காய் எங்கள் வயிற்றுக்குள்ளும் சென்றிருக்கும். மரத்தை அறுத்து தென்னங்குருத்தை தனியாக எடுப்பது வரை காத்திருப்போம். பனைமரம் வெட்டினாலும் இதே மாதிரி காத்திருப்போம். ஏனென்றால் பனங்குருத்து, தென்னங்குருத்துகளின் ருசியே அலாதியானது.
‘அம்மா..தம்பி ஸ்கூலுக்கு வரமாட்டேங்கிறான்.’
‘விடுலே...அவன் பக்கத்து வீட்டு மாடு கண்ணு ஈணுதுன்னாலே ஸ்கூல் போக மாட்டான்.
இன்னைக்கு நம்ம மாடு கன்ணு ஈணுதுல்ல’
இன்னைக்கு நம்ம மாடு கன்ணு ஈணுதுல்ல’
தம்பி இப்படித்தான். யார் வீட்டில் மாடு கன்று ஈன்றாலும், கோழி குஞ்சு பொறித்து எடுத்து விடுகின்ற முதல் நாளும் பள்ளிக்கு விடுமுறை விட்டு விடுவான்.
பள்ளிவிட்டு மாலை வீடு வந்தால் வீட்டில் புதிதாக ஒரு ஜீவன் இருக்கும். கூடவே கருப்பட்டியில் காய்த்த சீம்பால் இருக்கும். பக்கத்து வீடு சித்தப்பா, பெரியப்பா வீடுகளுக்கும் சீம்பால் கொடுத்து உறவை புதுப்பித்துக்கொள்வோம்.
பள்ளிவிட்டு மாலை வீடு வந்தால் வீட்டில் புதிதாக ஒரு ஜீவன் இருக்கும். கூடவே கருப்பட்டியில் காய்த்த சீம்பால் இருக்கும். பக்கத்து வீடு சித்தப்பா, பெரியப்பா வீடுகளுக்கும் சீம்பால் கொடுத்து உறவை புதுப்பித்துக்கொள்வோம்.
வருடா வருடம் சுதந்திர தினத்தன்று நடக்கும் தெற்குச்சூரங்குடி ஜவகர் கிராம அபிவிருத்திச்சங்க ஆண்டு விழா கொண்டாட்டமான மாட்டுவண்டிப்போட்டி நடக்கும் போது வண்டி வண்டியாக பேரிக்காய்கள் மலிவு விலையில் வந்திறங்கும். எல்லோர் வாயும் பேரிக்காய் எச்சில் வழிந்தோட மாடுகளின் வேகத்தை ரசித்து ருசிக்கும்.
ஒருமுறை எங்கள் நிலத்தில் மரச்சீனிக்கிழங்கு போட்டிருந்தார்கள். அந்த நாட்களில் நாங்களே நிலத்தை தோண்டி கிழங்கு பிடுங்கி வீட்டிற்கு எடுத்து வருவோம். வெளியே கன மழை, அவித்த கிழங்கு, பச்சை மிளகாய் தொட்டு சாப்பிட இன்னொரு பிறவி கிராமத்திலே பிறந்து வர வேண்டும். அந்த மாதங்களின் காலை மாலைகளை ருசியாக்கியது கிழங்கு துண்டுகளும், கிழங்கு வற்றல்களும். சக்கரை வள்ளிக்கிழங்கு சீசன் வரும் போது கிழங்கு வியாபாரி முந்திரிக்கொட்டை, பழைய ஆக்கர் சாமான் கொடுத்தால் பதிலுக்கு சக்கரை வள்ளிக்கிழங்கு தருவார்.
திருமணம் மற்றும் கோயில் கொடைவிழாக்களில் தோரணம் கட்டிய வாழை மரங்களை வெட்டி உரக்குண்டில் போட்டிருப்பார்கள். எதையாவது கொடு என்று சிறுகுடல் அழைப்பு விடுக்கும் போது வாழைப்பட்டைகளை உரித்து டியூப் வடிவில் உள்ளிருக்கும் வாழைத்தண்டை வெட்டி சாறை கடித்து உள்ளுக்குள் கொடுத்தால் தான் குடல் சமானமாகும். வாழைப்பூவின் உள்ளிருக்கும் வாழைமொட்டும் ஸ்வாகா.
ஞாயிற்றுக்கிழமைகளில் யார் வீட்டில் கோழிக்கறி வைத்தாலும் ஊருக்கே தெரிந்து விடும். பின்னே காலையிலே கோழியை துரத்தும் போது அவ்வளவு சீக்கிரம் கையில் கிடைக்குமா என்ன? அதன் உயிர் ஓய்வது வரை ஓடும். பக்கத்து வீடு வைக்கோல் போர், மேல வீட்டு அடுப்படி, கீழ வீட்டு மாட்டுத்தொழுவம் என எல்லோர் வீடுகளுக்கும் போய் அவர்களின் கேலிப்பேச்சுக்கு ஆளான பின் தான் அகப்படும்.
அப்போதெல்லாம் அம்மா மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை நெல் அவிப்பார்கள். நெல்லை மாடியில் உலர வைத்து பொறி வைத்தால் எப்போதாவது அணில் மாட்டும். மாட்டிய அணில் வறுவலாகி ஆளுக்கொரு துண்டென இரப்பைக்குள் போகும்.
ராமண்ணன் அப்பா சந்தையில் மளிகை வியாபாரம் செய்யும் போது கீழே சிந்திய தானியங்களை மொத்தமாக அள்ளி வீட்டுக்கு எடுத்து வருவார். அவர்கள் வீட்டுக்கு விளையாடப்போகும் போது முறத்தில் அந்த தானியங்களின் கலவை இருக்கும். சிறுபயறு, பெரும்பயறு, கொண்டைகடலை, உளுந்து, பருப்பு என்று எல்லாமும் கலந்து இருக்கும். அதை தனித்தனியாக பிரிக்க உதவி செய்யும் பாவனையில் வாய் சிறு பயறு, கொண்டைக்கடலைகளை அரைத்துக்கொண்டிருக்கும். சரஸ்வதி பூஜையன்று சாமிக்கு படைக்க அம்மா இரண்டு கிலோ கொண்டை கடலை வாங்கி வரச்சொன்னால் ‘இந்த அம்மாக்கு கணக்கே தெரியாது..ரெண்டு கிலோ எப்படிப் பத்தும்? ‘ நாலுகிலோவாய் கடன் வைத்து வாங்கி வருவோம். அப்புறம் சாப்பிட முடியாது அவஸ்தைப்படுவது தனிக்கதை.
ஞாயிறு தோறும் உளுந்தங்கஞ்சி, எப்போதாவது செய்யும் உளுந்தங்களி, கருப்பட்டி போட்ட கேழ்வரகு கூழ் என்று தெரிந்தோ தெரியாமலோ நன்றாகவே சாப்பிட்டிருக்கிறோம்.
வீட்டிலே கோழி வளர்ப்பதால் முட்டை எப்போதும் வீட்டில் இருக்கும். அப்பாவுக்கு தினமும் முட்டை வேண்டும். அப்பா ஆம்லெட்டில் வேண்டுமென்றே மீதம் வைப்பார்.
வீட்டிலேயே பசு மாடு இருந்ததால் பால், தயிர், மோருக்கு குறைவு இருந்ததில்லை. தீபாவளியன்று அப்பா கொடுத்து விட்டதாய் ஆட்டுக்கறி வீட்டுக்கு வரும். தவிர சங்கடாகர சாமிக்கு பலி கொடுத்த கிடா, வாதை சாமிக்கு பலி கொடுத்த பன்றிக்கறி என எல்லாமும் கலந்திருக்கிறது எங்கள் உதிரத்தில்.
அம்மாவுக்கு மட்டும் சாப்பிட ஹார்லிக்ஸ் வாங்கி அக்கா எங்களுக்கு தெரியாது ஒளித்து வைத்திருப்பாள். விளையாட்டுக்கு ‘தூ’ விட்டு விட்டு அடுக்களைக்கு தண்ணி குடிக்க வரும் போது பூனை போல பாத்திரங்களை உருட்டினால் ஹார்லிக்ஸ் கையில் மாட்டும். அந்த திருட்டு ஹார்லிக்ஸ் ருசி இன்று சுய சம்பாத்தியத்தில் வாங்கிச் சாப்பிடுவதில் துளியும் இல்லை. மறு நாள் ஹார்லிக்ஸ் அந்த இடத்தில் இருக்காது என்பதை நீங்களே யூகித்து விடலாம்.
தவிர திருக்கார்த்திகை தினத்தன்று வீட்டிலே செய்கின்ற இலைக்கொழுக்கட்டை, அச்சு முறுக்கு, சுத்து முறுக்கு, முந்திரிக்கொத்து, கருப்பட்டி பலகாரம், சீனிப்பலகாரம் என இனிப்புகளால் பல கசப்புகளை மறந்திருக்கிறோம். மறு நாள் தவறாது பெய்கின்ற இலைஉருட்டி மழையைப் பற்றியும் இங்கே பதிவு செய்து விடுகிறேன்.
வெள்ளிக்கிழமை என்றால் அப்படிப்பிடிக்கும். மறுநாள் சனி பள்ளி விடுமுறை என்று ஒரு காரணம் இருந்தாலும் மற்றொரு காரணமும் உண்டு. அன்று தான் தோசை அல்லது இட்லி செய்வார்கள். வியாழன் இரவெல்லாம் கனவோடு தூங்குவோம். விறகடுப்பில் நின்று கொண்டே எல்லாருக்குமாய் பொறுமையாய் ஐம்பது தோசைகள் சுடும் அக்காவை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். ஐந்து தோசைகள் சுடுவதற்குள் நான் படும் பாடு இருக்கிறதே!
ரேசனில் வாங்கி வந்த கோதுமையில் அவ்வப்போது செய்கிற கோதுமை தோசை, சப்பாத்தி, பூரியையும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஏதாவது விட்டுப்போயிருக்கிறதா…?
சம்பக்குளத்தில் பறித்துச் சாப்பிடுகிற அல்லிக்காய், தாமரைக்காய் பற்றிச்சொல்லாவிட்டால் அந்த குளத்தங்கரை இசக்கி என்னை மன்னிக்க மாட்டாள். ->Anbu
No comments: