Tuesday, March 18 2025

Header Ads

இன்னமும் தமிழன் இளிச்சவாயந்தானா?

சிவில் சர்விஸஸ் தேர்வினை முடித்து பயிற்சிக்காக டேராடூன் சென்றிருந்த போது நிகழ்ந்த சம்பவம் இது.

உடன் பயிற்சியில் இருந்த உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த பேட்ஜ் மேட்டுக்கு அன்று பிறந்த நாள். டிரக்கிங்கில் இருந்த இரண்டு வார காலகட்டத்தில் இந்த நாள் வந்தது. நண்பர்கள் சிலரோடு சேர்ந்து அவர் அறையைத் தட்டி " ஹேப்பி பர்த் டே வர்மாஜி " என்றோம் கோரஸாக.

அதற்கு அவர் தந்த பதில் திகைப்பை ஏற்படுத்தியது. கூலாக " ஸேம் டூ யூ"- என்று பதில் தந்தார் தனது தொப்பையைத் தடவியபடி.

வட நாட்டுக்காரர்களின் ஆங்கில மொழி அறிவு இந்த லட்சணந்தான்.

ஆங்கிலத்தை அறிவாகச் சுட்டுவதில் எனக்கும் சம்மதம் இல்லைதான். ஆனால் இந்தியாவில் அனைத்து சட்டம், நிர்வாக புத்தகங்களும் ஆங்கிலத்தில் இருக்கிறது. உலக அளவிலான புதிய நிர்வாகச் சங்கதிகளை ஆங்கிலத்திலேயே பெற முடிகிறது. இச்சூழலில் இந்தியா போன்ற ஆயிரக்கணக்கான மொழி புழங்கும் தேசத்தில் தொடர்புக்கான ஆங்கிலத்தின் அடிப்படை மொழி அறிவு கூட இல்லாத ஒரு நபருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த பதவி தூக்கிக் கொடுக்கப் படுகிறது என்றால் அதில் நியாயம் எப்படி இருக்க முடியும்?

சரி. வாதத்துக்காக ஒப்புக் கொள்கிறேன். இவருக்கு போதுமான நிர்வாக அறிவு இருக்கிறது. ஆங்கில மொழி அறிவு மட்டுமே குறைவு பதிலாக ஹிந்தி மொழி அறிவு இருக்கிறது. எனவே இவரைப் போன்றவர்களை உயர் பதவியில் அமர்த்துவது தவறில்லை என்ற சமாதானத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

அப்படியானால் இவரைப் போலவே போதுமான நிர்வாக அறிவும் ஆங்கில மொழி அறிவுக் குறைவும், அதற்குப் பதிலாக தமிழ் உட்பட தத்தம் தாய் மொழி அறிவு மட்டுமே கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இதர மாநிலத்து மாணவர்களை இந்த ஹிந்திக்காரனுக்கு நிகராக உயர்த்தி வைக்குமா அரசாங்கம்?

ஒரு போதும் அந்த வாய்ப்புக்கு வழியில்லை.

எப்படி?

சிவில் சர்வீஸஸ் தேர்வில் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஹிந்திக்காரர்களுக்கு மட்டும் அவர்கள் தாய்மொழியில் விளக்கம் எழுதப்பட்டிருக்கும். ஏனையோருக்கு இந்த சலுகை கிடையாது. ஒரு போட்டித்தேர்வில் மற்றவரை விட்டு விட்டு ஒரு குறிப்பிட்ட சாரரை மட்டும் பிட் அடிக்க அனுமதிப்பதற்குச் சமமான செய்கையாகும் இது.

இந்த நியாயமற்ற தன்மையை உணர்ந்து சிவில் சர்வீஸஸ் தேர்வினை நடத்தும் யுபிஎஸ்ஸி அமைப்பு, முதல் நிலைத்தேர்வினில் (CSAT- Civil Services Aptitude Test) ஹிந்தி மாணவர்களுக்கு குறைந்த பட்ச ஆங்கில அறிவை உறுதி படுத்தும் 8 கேள்விகளை இணைத்திருக்கிறது. இவைகள் காம்ப்ரிகன்சன் வகையிலானவை என்பதால் ஹிந்தி இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே கேட்கப்படும். ஹிந்திக்காரர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் சலுகையான இந்தியில் விளக்கம் கொடுக்கும் முறை இதில் நிறுத்தப்பட்டுள்ளது.

விடுவார்களா வடக்கத்தியர்?

இந்த உத்தரவினை எதிர்த்து தனக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வரும் நியாயமற்ற சலுகைகள் தொடர வேண்டும் எனக் கோரி வட இந்தியர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துகிறார்கள். அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

"ஆங்கிலம் தெரிந்த நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே எளிதில் வெற்றிபெறும் வண்ணம் தேர்வு முறை அமையக்கூடாது. இது கிராமப் புற எளிய மாணவர்களுக்கு எதிரானதாகும்" - என்ற இவர்களின் கவர்ச்சிகரமான பம்மாத்துக் கோரிக்கை இன்றைய வட இந்திய ஆட்சியாளர்களையும், மீடியாவையும்,பொதுமக்களையும் எளிதில் கவரக்கூடியதாகவும், அப்படியே சட்டமாகக் கூடிய ஆபத்தும் இருக்கிறது.

ஆனால் அடிப்படை நியாயமோ அடியோடு வேறு.

இவர்கள் கும்பல் கலாச்சாரத்தில் மூழ்கி மெஜாரிட்டியான ஹிந்தி மாணவர்களுக்கு தனிச்சலுகை கொடுப்பது, ஹிந்தி தெரியாத ஏனைய கிராமப்புற மாணவர்களை அடியோடு நசுக்கும் காரியமாகும்.

ஹிந்தி தெரியாத கிராமத்து மக்கள் மட்டும் எளியவர்கள் இல்லாமல் எதிரிகளா? ஹிந்திக் காரர்களுக்கு தாய்மொழியில் விளக்கம் கொடுத்தால், தமிழ் உட்பட ஏனைய மொழியைத் தாய்மொழியாய் கொண்டவர்களுக்கும் அவரவர் மொழியில் விளக்கம் கொடுங்கள். போட்டி என்றால் சமதளப்போட்டி மட்டும் தானே நியாயமாய் இருக்க முடியும்? இதில் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது எப்படி சரியாக இருக்கும்?

ஒரு போட்டித்தேர்வில்- அதிலும் உலகிலேயே கடுமையான தேர்வுகளில் ஒன்று எனக் கருதப்படும் இந்திய சிவில் சர்விஸஸ் தேர்வில், தசம புள்ளிகள் கூட கட் ஆஃபாக நின்று ஆயிரக் கணக்கானோரின் தலை எழுத்தை மாற்றக் கூடிய கடும் போட்டித் தேர்வில், இந்தியாவின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகள் யாருக்கு என முடிவு செய்யும் தேர்வில், ஒரு சாரருக்கு அவருடைய தாய்மொழியில் விளக்கம் கொடுப்பதும் இன்னொரு சாரருக்கு அப்படி ஒரு வாய்ப்பு மறுக்கப்படுவதும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான பிரிவு 14, "சமத்துவத்துக்கான உரிமைக"க்கு புறம்பானதும், அதனை மீறும் காரியமும் ஆகும்.

ஒரு தனி மனிதன் வேலை பெறுகிறானா இல்லையா என்பதோடு முடிந்து விடுகின்ற எளிய சங்கதி அல்ல இது. ஒரு கூட்டு தேசத்தின் நிர்வாகத்தில் ஒரு இனத்தின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படுகிறதா அல்லது மறுக்கப்படுகிறதா என்ற உரிமை தொடர்பான சங்கதி இது.

வல்லான் வகுப்பதே வாய்க்கால்கள் என்று எண்ணிக் கொண்டு தொடர்ந்து தமிழன் இளிச்சவாயன் களாகவே இருக்க வேண்டுமா என்பதை தமிழக அரசியல் தலைவர்களும், மீடியாவும், வழக்க றிஞர்களும், சமூக செயற்பாட்டாளரும், அதிகாரிகளும், பொதுமக்களும் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது.

பகிர்வு: சுந்தரேசன் ராமச்சந்திரன்

No comments:

Powered by Blogger.